பால்: அறத்துப்பால்/ குறள் இயல்: பாயிரவியல் / அதிகாரம்: வான்சிறப்பு.
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது ,அக்கடவுளது ஆணையான் உலகமும், அதற்கு உறுதியாகிய அறம் பொருள் இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் – மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான்; தான் அமிழ்தம் என்று உணரற்பாற்று – அம்மழை தான் உலகிற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடைத்து. (‘நிற்ப’ என்பது ‘நின்று’ எனத் திரிந்து நின்றது. ‘உலகம்’ என்றது ஈண்டு உயிர்களை. அவை நிலைபெற்று வருதலாவது பிறப்பு இடையறாமையின் எஞ்ஞான்றும் உடம்போடு காணப்பட்டு வருதல். அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின், உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை ‘அமிழ்தம் என்று உணர்க’ என்றார்.).
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
மு.வரதராசனார் உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
பரிமேலழகர் உரை:
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி – உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை – அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை. (தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணை மேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின் அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.).
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
பரிமேலழகர் உரை:
விண் இன்று பொய்ப்பின் – மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் – கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி – நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. (கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், ‘விரி நீர் வியன் உலகத்து’ என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.).
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வரதராசனார் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் – மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். (‘குன்றியக்கால்’ என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
மு.வரதராசனார் உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
பரிமேலழகர் உரை:
கெடுப்பதூஉம் – பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கேஎடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை – இவை எல்லாம் வல்லது மழை. (‘மற்று’ வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், ‘கெட்டார்க்கு என்றார்’. ‘எல்லாம்’ என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. ‘வல்லது’ என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.).
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
மு.வரதராசனார் உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
பரிமேலழகர் உரை:
விசும்பின் துளி வீழின் அல்லால் – மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது – வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. (‘விசும்பு’ ஆகு பெயர். ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.).
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
மு.வரதராசனார் உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
பரிமேலழகர் உரை:
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் – அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் – மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது “கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து”(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
பரிமேலழகர் உரை:
வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது – தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் – மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் ‘செல்லாது’ என்றார். ‘உம்மை’ சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)
குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
மு.வரதராசனார் உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
பரிமேலழகர் உரை:
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா – அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் – மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.).
குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
மு.வரதராசனார் உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
பரிமேலழகர் உரை:
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் – எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது – அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை ‘உலகியல்’ என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், ‘நீர் இன்று அமையாது உலகம் எனின்’ என்றார். இதனை,’நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது’ என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).